காரிய சித்தி மாலை
பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.
உலகம் முழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருள் எவன் அவ்
உலகிற் பிறக்கும் விகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலகு முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம்.
இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க் கூறின்றிக் கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதியை பொன் சரணம் சரணம் அடைகின்றோம்.