முருகப் பெருமான் தமிழர்களின் ஒப்பற்ற தெய்வமாவார். தொல்காப்பியரின் கூற்றுப்படி தொன்மையான தமிழர்களின் ஐந்திணை வழிபாடுகளில் முருகன் சேயோனாக வருகிறார். சேயோன் குறிஞ்சி நிலத் தலைவனாவார். ஐந்திணைகளில் முல்லை நிலத்திற்குரிய தெய்வமாக மாயோனும்(திருமால்) மருத நிலத்தின் தெய்வமாக இந்திரனும் பாலை நிலத்தின் தெய்வமாக கொற்றவையும் நெய்தல் நிலத்தின் தெய்வமாக வருண பகவானும் இருக்கிறார்கள். இருந்தாலும் முருகனை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களாக இருப்பதால் இக்காலத்தில் அவரைத் தமிழ்க் கடவுள் என்று அடையாளப்படுகிறார்
முருகு என்றால் தமிழில் அழகு என்று பொருள். அதன் அடிப்படையில் முருகனானவன் அழகன் ஆகின்றான். தமிழின் மெல்லினம், இடையினம் மற்றும் வல்லினத்தை ஒருசேர இணைத்த பெயராக அமைந்தது.
அன்னை பார்வதி தேவியின் ஒரு அவதாரத்தில் மலைகளின் அரசரான இமவான் மன்னனின் மகளாக பிறந்தார். அவர் மீண்டும் சிவனை அடைவதற்குக் கடும் தவம் புரிந்தார். அவருடைய தவத்தினால் சிவன் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார். ஆகவே பார்வதியை மணந்து அவருடன் அழைத்துச் சென்றார். அவர்கள் இருவரும் கந்தமாதான பர்வதத்தில் தங்கினர். அங்கு சில நாட்கள் தங்களுடைய மண வாழ்வினைக் கழித்தார்கள். அதன் பின்பு சிவ பெருமான் ஆழ்ந்த தியானத்தை மேற்கொண்டார்.
அப்போது பார்வதி அவருக்கு சேவை செய்வதையே தனது பக்தியாக நினைத்து அவருக்கு அனைத்து சேவைகளையும் செய்தார். அந்த நேரத்தில் அசுரக் குல அரசரான சூரபத்மன் மற்ற அனைத்து தேவர்களையும் சிறைபிடித்து கைது செய்தார். வானுலகம் வெறிச்சோடி இருந்தது. மூன்று உலகங்களிலும் பேய்களின் ஆட்சி நடந்தது.
சிவபெருமான் தியானத்தில் இருப்பதால் பார்வதியின் மீது ஈர்ப்பை ஏற்படுத்த வேண்டிய தேவை இருந்தது. அவர்கள் ஒரு விசித்திரமான யோசனையை நடைமுறைப்படுத்த ஆயத்தமாகினர். காதலின் கடவுளான மன்மதனை அணுகி சிவபெருமானின் கவனத்தை அவருக்கு சேவை செய்துக் கொண்டிருக்கும் பார்வதியின் மீது காம பார்வையாக விழ வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மன்மதனும் அவர்களின் கோரிக்கையை ஏற்று கந்தமாதான பர்வதத்திற்குச் சென்றார். அங்கு அவர் தனது வில்லிலிருந்து காதலைத் தூண்டும் அம்புகளை சிவபெருமானை நோக்கி எய்தினார். அவை தனது தவத்திற்கு ஏற்பட்ட தொந்தரவாக கருதி கோபமடைந்த சிவன் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறந்தார். அதனால் வெளியே வந்த தீப்பிழம்புகள் மன்மதனைச் சாம்பலாக பொசுக்கின.
இதனால் அதிர்ச்சி அடைந்த அனைத்து தேவர்களும் சிவபெருமானை அமைதிப்படுத்த வழிபாடு செய்து தங்களுக்கு நேர்ந்த இன்னல்களைத் தெரிவித்து எங்களுக்கு உதவுவதற்குத் தான் மன்மதன் இவ்வாறு செய்ததாக மன்னிப்பு கோரினர். இதனால் சிவபெருமான் மனமிறங்கி மன்மதன் யார் கண்ணுக்கும் தெரியாமல் இருப்பாய் என்ற சாபத்துடன் மன்மதனுக்கு உயிர் கொடுத்தார்.
மன்மதனை எரித்த அந்த ஆறு தீப்பொறிகள் சரவண பொய்கைக்கு அக்னி பகவனால் கொண்டு செல்லப்பட்டன. அங்கு அந்த ஆறு தீப்பொறிகளும் அழகிய ஆறு குழந்தைகளாக வடிவம் பெற்றிருந்தன. அந்த ஆறு குழந்தைகளும் ஆறு கார்த்திகை பெண்களின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டன.
ஒருமுறை சிவபெருமானும் பார்வதி அம்மையாரும் அந்த சரவண பொய்கைக்கு வந்திருந்தனர். அப்போது தாயான பார்வதி அந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றாக கட்டித் தழுவி அவர்களை ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்தியோஜதம் மற்றும் ஆதோமுகம் ஆகிய ஆறு முகங்களுடன் ஒரே உருவமாக மாற்றினார்.
அன்னை பார்வதி முருகப்பெருமானுக்குத் தனது சக்திகளை உள்ளடக்கிய வேல் ஒன்றைப் பரிசாக வழங்கினார். அந்த வேலைக் கொண்டு முருகன் சூரபத்மனுடன் போரிட சென்றார்.